செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் கலைஞர் நினைவிடம் "செஸ் போர்டு" போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறது. பிரம்மாண்ட தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட்
முதற்கட்டமாக தமிழகத்தின் கலாச்சாரம் ,பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில், இதையடுத்து போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்க ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
அத்துடன் பிரதமரின் வருகை ஒட்டி ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு இன்று சென்னையில் தொடங்கப்பட உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் சதுரங்க பலகை போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.