கருணாநிதி சிலை முன்பு திமுக-வினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் கருணாநிதி சிலை முன்பு வேட்பு மனுவை வைத்து மருத்துவர் சரவணன் எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன் திருப்பரங்குன்றம் தொகுதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணனின் ஆதரவாளர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதியின் சிலை முன்பு வேட்புமனுவை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், அது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைபட வேண்டாம் என்றும் அடுத்தடுத்து வேறு பணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.