கருணாநிதி முதல்வர் ஆன போது பிறந்தது ஊழல் - முதல்வர் பழனிசாமி பதிலடி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சவால்விட்டு வருகின்றனர்.
நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என இருவரும் சவால்விட்டுள்ளனர். ஊர்ந்து சென்று தான் பழனிசாமி முதல்வர் ஆனார் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஊர்ந்து செல்ல நான் பாம்பா? பல்லியா? நடந்து சென்று முதல்வரானேன் என பழனிசாமி பதிலடி கொடுத்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி என ஸ்டாலின் தொடர்ந்து அனைத்து மேடைகளிலும் விமர்சித்து வருகிறார்.
அதற்கு இன்று பழனிசாமி பதிலளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கருணாநிதி என்று தமிழக முதல்வர் ஆனாரோ அன்று பிறந்தது ஊழல், அதற்கு முன் ஊழல் என்ற வார்த்தையே இல்லை. அதனால் தான் அரசு எது செய்தாலும் ஊழல் ஊழல் என்று கூறிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின், அவர்களால் அந்த வார்த்தையை மறக்க முடியாது” என்றார்.