டி.ஆர்.பாலுவிடம் மன்னிப்பு கேட்ட கருணாநிதி - துரைமுருகன் ஓபன் டாக்..!
கருணாநிதி பற்றி மேடையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகளை பகிர்ந்த போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்ணீர் விட்டு அழுதார்.
மன்னிப்பு கேட்ட கருணாநிதி
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுதிய “பாதை மாறா பயணம்” நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது மேடையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, டி.ஆர் பாலுவிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
துரைமுருகன் பேசுகையில், 'டி.ஆர்.பாலு மனதில் பட்டதை படபடவென பேசக்கூடியவர். ஒருமுறை கருணாநிதி ஏதோ ஒரு விஷயத்தை பேசும்போது டி.ஆர்.பாலு குறுக்கிட்டு சில கருத்துகளை தெரிவித்தார்.
நானும் அருகே இருந்தேன். உடனே கருணாநிதி கோபமடைந்து, 'நீ தலைவனா, நான் தலைவனா...எது சரி என எனக்கே சொல்லித்தர்றியா... போடா..'என்று விரட்டினார்.உடனே டி.ஆர்.பாலு வெளியே சென்றுவிட்டார். சில நிமிடங்களிலேயே கருணாநிதி என்னை அழைத்து, 'எப்பா.... நல்லா யோசிச்சு பார்த்துட்டேன்.அவன் (டி.ஆர்.பாலு) சொல்றது சரிதாம்பா.. அவனை கூப்பிட்டு வா' என கூறினார்.
நானும் டி.ஆர்.பாலுவை சமாதானம் செய்து அழைத்துவந்தேன். அப்போது டி.ஆர்.பாலுவிடம், 'பாலு...நீ சொன்னது தாம்பா சரி.. நான்தான் அவசரப்பட்டுட்டேன்.. என்னை மன்னிச்சுடு பாலு' என்று கருணாநிதியே மன்னிப்பு கேட்டார்.
அதைக் கேட்டதும் பாலுவும் அழுதுவிட்டார்' என்றார். இதனைக் கேட்டு கண் கலங்கி அழுதார் டி.ஆர்.பாலு.
மேலும் விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மத்திய அரசும், நீதித்துறையும் ஒத்துழைத்திருந்தால் இலங்கைக்கு பாலம் அமைத்திருப்போம் என்றார். விரைவில் அதற்கான சூழல் ஏற்பட்டு நிச்சயம் பாலம் கட்டப்படும் எனவும், அதை ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் குறிப்பிட்டார்.