கர்நாடக அரசுடன் எந்தவிதமான உறவையும் தமிழக அரசு வைத்து கொள்ளக்கூடாது - ராமதாஸ்!
மேகேதாட்டு அணை திட்டத்தை கைவிடும் வரை, கர்நாடக அரசுடன் எந்தவிதமான உறவையும் தமிழக அரசு வைத்து கொள்ளக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு அணையை கட்ட முடியாது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்த உமாபாரதி உள்ளிட்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும்போது மேகேதாட்டு அணைக்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதம் ஆகும். மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வதுதான் இத்திட்டத்தை நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழியாகும்.
ராமதாஸ்
அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகேதாட்டு அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும். அதேபோல், மேகேதாட்டு அணை திட்டத்தை கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்தவிதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு
வைத்துக்கொள்ள கூடாது. மக்களவை தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க 22-ம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.