கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் உடலில் காந்த சக்தி? - கர்நாடகாவிலும் ஒருவருக்கு உடலில் ஒட்டிக்கொண்ட பொருட்கள்!
மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர் உடலில் காந்த சக்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பிபிசி கல்லூரி அருகே வசித்து வரும் ராமதாஸ் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் அவர் கண்ட ஒரு வீடியோவில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உடலில் இரும்பு, சில்வர் போன்ற பொருட்கள் ஒட்டிக்கொண்டது.
இதை கண்டதும் அவரது உடலிலும் இரும்பு பொருட்கள் ஒட்டிக்கொள்கிறதா என பரிசோதனை மேற்கொள்ள நினைத்தார். இதனால் வீட்டில் இருந்த ஸ்பூன், சில்வர் பொருட்கள், நாணயங்கள் ஆகியவற்றை அவரது உடலில் ஒட்டிவைத்து பார்த்துள்ளார். அப்போது அந்த பொருட்கள் அவரது உடம்பில் ஒட்டிக்கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
அதில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு, இது போன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கிறது என கூறுவது தவறான தகவல் என்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார்.
மேலும், ராமதாசுக்கு ஏற்கனவே பிபி, சுகர் போன்ற பிரச்சினை உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும், ஆய்வுக்கு பிறகே உண்மை தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.