கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை - ‘பர்தா’ அணிய தடை விதித்தால் முற்றுப்போராட்டம்
புதுச்சேரி அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி பர்தா அணிந்து வந்ததற்கு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த செயலைக் கண்டித்து மாணவர் கூட்டமைப்பு மற்றம் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் பியு கல்லூரிக்கு ஹிஜாப் எனப்படும் ஸ்கார்ஃப் அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் உடுப்பி, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 11, 12ம் வகுப்புகளுக்கான பிரத்யேக ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று மாணவர்கள் கழுத்தில் காவி துண்டை அணிந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பொதுவான டிரஸ் கோடு விதியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதே போன்று சம்பவம் தற்போது புதுச்சேரியில் நடந்துள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோயில் எதிரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் இந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வழக்கமாக பள்ளிக்கு பர்தா அணிந்து வருவது வழக்கம். பின்னர் வகுப்பறைக்கு செல்லும் போது அதனை கழட்டி பையில் வைத்துக் கொள்வார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கத்துக்கு மாறாக பர்தாவுடன் வகுப்பறையில் அமர்ந்து உட்கார்ந்தார். இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு இது குறித்து பேசியுள்ளனர். ஆனால், அதற்கு பெற்றோர்கள் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி பர்தா அணிந்துக்கொண்டு தான் வருவார் என்று இஸ்லாமியருக்கு ஆதரவாக சிலர் பள்ளியில் வந்து பேசி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், தொகுதி திமுக நிர்வாகி சங்கர் மற்றும் பலர் பள்ளிக்கு வந்து மாணவிக்கு ஆதரவாகவும், ஆசிரியரின் செயலுக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர்.
இது குறித்து அரியாங்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார், பள்ளிக்கல்வி முதன்மை அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த அமைப்பினர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க சென்றுள்ளார். கடந்த ஒருவாரமாக கர்நாடக மாநிலம் சிவமோகாவில் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த விவகாரம் தேசிய அளவி பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி மாணவி பர்தா அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.