கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன?
கமல் கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது.
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் இந்த படத்தில் நடித்துள்ள பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
கமல் பேச்சு
இந்த நிகழ்வில் சிவராஜ்குமாரின் குடும்பம் குறித்து பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன்.
உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தான் பிறந்தது. எனவே நீங்களும் எனது குடும்பத்தின் ஒரு அங்கம் தான். அவரை, சிவண்ணா என எல்லோரும் சொல்வார்கள். நானும் அவரை அப்படியே சொல்கிறேன்.
ஆனால், நான் அவருக்கு சித்தப்பா. இருந்தாலும், பெயர் சிவண்ணா. அதனால், அவரை அண்ணான்னு கூப்பிடுறேன். உங்கள் பிரதிநிதியாக, கன்னடத்து சூப்பர் ஸ்டார் இங்கு வந்திருக்கிறார். அவர் தன்னை அப்படி அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. என் மகனாக, என் ரசிகராக அவர் இங்கே வந்திருக்கிறார்" என பேசியிருந்தார்.
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கமல் பேசியதற்கு, கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் போராட்டம்
அங்குள்ள கன்னட அமைப்புகள், கமல்ஹாசன் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ்குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவம் மற்றும் ஆணவத்தின் உச்சம்.
ಮಾತೃಭಾಷೆಯನ್ನು ಪ್ರೀತಿಸಬೇಕು, ಆದರೆ ಅದರ ಹೆಸರಿನಲ್ಲಿ ದುರಭಿಮಾನ ಮೆರೆಯುವುದು ಸಂಸ್ಕೃತಿ ಹೀನ ನಡವಳಿಕೆಯಾಗುತ್ತದೆ. ಅದರಲ್ಲೂ ಕಲಾವಿದರಿಗೆ ಪ್ರತಿಯೊಂದು ಭಾಷೆಯನ್ನೂ ಗೌರವಿಸುವ ಸಂಸ್ಕಾರ ಇರಬೇಕು. ಕನ್ನಡವೂ ಸೇರಿದಂತೆ ಅನೇಕ ಭಾರತೀಯ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ನಟಿಸಿರುವ ನಟ @ikamalhaasan ತಮ್ಮ ತಮಿಳು ಭಾಷೆಯನ್ನು ವೈಭವಿಕರಿಸುವ ಮತ್ತಿನಲ್ಲಿ ನಟ… pic.twitter.com/PrfKX099lZ
— Vijayendra Yediyurappa (@BYVijayendra) May 27, 2025
ஒரு மொழியிலிருந்து எந்த மொழி பிறந்தது என்பதை வரையறுக்க கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது கன்னட மொழி. கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசன் தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.
இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், தக் லைஃப் படத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.