கேரளாவில் இருந்து வந்தால் ஒருவாரம் கட்டாய தனிமை - அரசு அதிரடி உத்தரவு
கேரளாவிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வாரங்களாக குறைந்து வந்த கொரோனா 2வது அலையின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக முதல் மற்றும் 2ஆம் அலையை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது.
இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து வருவோருக்கு அண்டை மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரளாவிலிருந்து கர்நாடகா செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரளாவிலிருந்து வரும் மக்களுக்கு ஒரு வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அவர்களுக்கு RT PCR சோதனை செய்யப்பட்டு அதில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.