வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்; எகிறும் உயிர் பலி - அறிகுறி, தடுப்பு வழிகள் என்ன?
குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அச்சம் எழுந்துள்ளது.
குரங்கு காய்ச்சல்
கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 154 பேருக்கு பரிசோதனை செய்த நிலையில், 3 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே, 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 வயது இளம்பெண் உட்பட இருவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு அதிகரிப்பு
இதனால், காய்ச்சலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த பாதிப்பு வந்துவிட்டால் திடீர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, அடிவயிற்றில் வலி, வயிற்றுப் போக்கு ஆகிய அறிகுறிகள் தென்படும். மிக மோசமாக பாதிக்கப்பட்டால் ரத்தக்கசிவு ஏற்படும் என்கின்றனர்.
இந்த வைரஸானது பாதிப்பிற்கு ஆளான விலங்குகள் சாப்பிட்டு விட்டு போட்ட உணவுப் பொருட்கள் மூலம் பரவுகிறது. இவை சாப்பிட்ட உணவுகள் ஆங்காங்கே சிதறி கிடந்தால் அவற்றை தொடும் மனிதர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.