மேகதாது அணை சர்ச்சை: தமிழக தீர்மானத்திற்கு கர்நாடகா முதல்வரின் பதில்

Vijay Tamil nadu Karnataka TVK
By Vinoja Jun 19, 2026 01:42 PM GMT
Report

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்வைத்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை சர்ச்சை: தமிழக தீர்மானத்திற்கு கர்நாடகா முதல்வரின் பதில் | Karnataka Minister Defends Mekedatu Project

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்களின் நலனையும் மனசாட்சியையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதே அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

மேலும், நதிநீரை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதால், இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை சர்ச்சை: தமிழக தீர்மானத்திற்கு கர்நாடகா முதல்வரின் பதில் | Karnataka Minister Defends Mekedatu Project

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல், கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதை ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் மத்திய அரசு வழங்கக்கூடாது என்றும், கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ ஒப்புதல் அளிக்கவோ கூடாது என்றும் தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

கர்நாடகா முதல்வரின் பதில்

மேகதாது அணை சர்ச்சை: தமிழக தீர்மானத்திற்கு கர்நாடகா முதல்வரின் பதில் | Karnataka Minister Defends Mekedatu Project

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம் தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மேகதாது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் முழுமையாகப் பார்க்கவில்லை.

அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் மட்டும் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை முழுமையாக பரிசீலித்த பிறகு, அதுகுறித்து எனது கருத்தை தெரிவிப்பேன்” என்று கூறினார்.