மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர்!

Karnataka Tamilnadu megathathu dam
By Thahir Jul 05, 2021 08:16 AM GMT
Report

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை : கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறி உள்ளார்.

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர்! | Karnataka Megathathu Dam

கர்நாடகாவுடன் காவிரி, தென்பெண்ணை ஆறுகள், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகள் தீர்வே இல்லோமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் நீரை கர்நாடகம் திறந்துவிடுவதில்லை.

மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பினார்.

அதில், நீர் மின் நிலையத்துடன் கூடிய மேகதாது அணையை, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு மாநிலமானது தனது திட்டங்களுக்கு மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது. ஆகவே, கர்நாடக முதல் மந்திரி , தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது அரசியல் விருப்பமின்மை” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,மேகதாது திட்டத்திற்கான டெண்டர்கள் விடும் பணிகளை தொடங்கினோம் என்று தெரிவித்த சிவக்குமார், “ஏன் அதே செயல்முறையைத் தொடரவும், டெண்டர்களை வழங்கவும் முடியவில்லை?” எனவும் கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.