முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் குந்தாப்பூரில் உள்ள பியு கல்லூரிக்குள் நுழைய விடாமல் மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் முக்காடு அணிந்து கல்லுாரிகளுக்கு சென்று வருவது வழக்கம் .
இந்நிலையில் முக்காடு (ஹஜாப்) அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து கொண்டு கல்லுாரிக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து கல்லுாரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் முக்காடு அணிந்து வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் கல்லுாரிக்கு முக்காடு அணிந்து வந்த மாணவிகளை கல்லுாரி முதல்வர் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து உடுப்பி கல்லுாரி மாணவி ஒருவர் முக்காடு (ஹிஜாப்) அணிந்து வர அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் பிரிவு 25-ன் படி முக்காடு (ஹிஜாப்) அணிவது ஒருவரின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு செவ்வாய்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.