பரபரப்பாகும் ஹிஜாப் போராட்டம் .. போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் விரட்டியடித்த காட்சி, அதேபோல சிமோகா மாவட்டத்தில் தேசிய கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றிய விவகாரம் என்பது போன்ற சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியtது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.