சம்பளமே வெறும் ரூ.15,000தான்; ரெய்டில் சிக்கிய 24 வீடுகள், ரூ.30 கோடி - பலே எழுத்தர்!
முன்னாள் எழுத்தரிடமிருந்து ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சொத்து குவிப்பு
கர்நாடகா, கொப்பலில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராக பணியாற்றிய காளகப்பா நிதகுன்ட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம், அவரது சகோதரர் ஜெகன் குன்ட்டியின் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையில் 30 போலீஸார் ஈடுபட்டனர்.
அப்போது காளகப்பா வீட்டில் கணக்கில் வராத 24 வீடுகளின் ஆவணங்கள், 4 காலி வீட்டு மனைகளின் ஆவணங்கள், 40.8 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆவணம் ஆகியவை சிக்கின. இந்த சொத்துகள் காளகப்பா, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சிக்கிய எழுத்தர்
தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து ரகசிய பீரோவில் சோதனை நடத்தியதில் ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் சிக்கின. மேலும் 16 விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், 2 கார்கள், 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து 96 முழுமையடையாத திட்டங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து ரூ.72 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக ஆதாரங்களும் கிடைத்துள்ளது.
தற்போது இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.