2 மாதங்களில் 9 முறை கடி; சிறுவனை விடாமல் துரத்தும் பாம்பு - என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழும் குடும்பம்!
தொடர்ந்து சிறுவனை பாம்பு தீண்டிக்கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தீண்டும் பாம்பு
கர்நாடகா மாநிலம் ஹால்கத்தா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தேவியின் மகன் பிரஜ்வால் (15). கடந்த ஜூலை மாதம் பிரஜ்வால் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது.
உடனடியாக அவரின் தந்தை வேப்பிலை மற்றும் உப்பு பத்து போட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றியுள்ளார். பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒன்பது முறை பிரஜ்வாலை பாம்புகள் கடித்துள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் பிரஜ்வாலின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க தங்களது வீட்டையே மாற்றியுள்ளனர் பிரஜ்வாலின் மெற்ரோர். துரதிஷ்டவசமாக, வீடு மாறிய பிறகும் பிரஜ்வாலை பாம்பு கடித்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவுதான் முயற்சி செய்து பிரஜ்வாலை காப்பாற்றினாலும், அவரின் கால்களில் ஒன்பது வெவ்வேறு இடங்களில் பாம்பு கடித்த தடங்கள் உருவானது.
நிலைகுலைந்த குடும்பம்
இந்நிலையில் இதிலிருந்து பிரஜ்வாலை காப்பாற்ற ஆன்மீக சடங்குகளில் ஈடுபட்டு, நாகதோஷம் அல்லது பாம்பு சாபத்திலிருந்து பிரஜ்வாலை காப்பாற்ற பல்வேறு விதமான பூஜைகளை குடும்பத்தினர் செய்தனர். தங்களது விவசாய நிலத்தில் ஒரு சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்கவும் செய்துள்ளனர்.
பாம்பு கடித்த இந்த அனைத்து நிகழ்வுகளிலும், பிரஜ்வால் மட்டுமே பாம்பை கண்டுள்ளார். ஒரே ஒருமுறை மட்டும் பிரஜ்வாலின் பெற்றோர் இருட்டில் ஒளிரும் கண்களுடனான ஒரு பாம்பை கண்டதாக கூறுகின்றனர். ஒவ்வொரு நிகழ்வும் சில நாட்கள் இடைவெளி விட்டு நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பிரஜ்வால் குணமடையும்போதும், அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே பிரஜ்வாலின் குடும்பம் இருந்து வருகின்றனர்.
பிரஜ்வால் பாம்பின் சாபத்திற்கு ஆளானதன் காரணமாகவே இவ்வாறு நடந்து வருவதாக தற்போது அவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த சமத்துவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.