கர்நாடாக தேர்தலில் யாருக்கு வெற்றி ? - மீண்டும் கோட்டையினை பிடிக்குமா பாஜக
கர்நாடகா 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ( நாளை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
கர்நாடகா தேர்தல்
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார்.
அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெற்றி யாருக்கு
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன. கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி இந்த முறை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தலில் 3 பெரிய கட்சிகளும் பல சிறிய சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் நகர்ப்புறம், பெங்களூர் ரூரல், ஷிவமொக்கா, ராமநகரா, மைசூர், கோலார், ஹாசன், மாண்டியா மற்றும் தெற்கு கர்நாடகாவில் சாமராஜநகர், வட கர்நாடகாவில் துங்கபத்ரா அணை மற்றும் ஹோஸ்பெட் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இங்கே பாஜக , காங்கிரசில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது