கேரளீயம் 2023: ஒரே மேடையில் முதல்வருடன் நடிகர்கள் கமல், மம்முட்டி மற்றும் மோகன்லால்!
கேரளாவில் நடைபெறும் கேரளீயம் 2023 நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி மற்றும் மோகன்லால் கலந்து கொண்டனர்.
கேரளீயம் 2023
கேரளா மாநிலத்தில் 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) விழா நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இவ்விழா நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக விழா நடைபெற உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் விழாவை துவக்கி வைத்தார். இதில் நடிகர் கமல், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நேற்று கலந்து கொண்டனர்.
அவர்கள் மூவரும் ஒன்று போல பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
கமல்ஹாசன்
பேச்சு இந்த 'கேரளீயம் 2023' நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், கண்காட்சி, உணவு திருவிழா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் ஒரு வார காலத்திற்கு இந்த திருவிழா நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது "2017ல், தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்தபோது, மீண்டும் கேரளாவுக்கு வந்து எங்கள் அன்பான முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை பெற்றேன்.
எனது மக்களை மையப்படுத்திய அரசியல், புகழ்பெற்ற கேரள மாதிரி வளர்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்றது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, 1996ம் ஆண்டு மக்கள் திட்டப் பிரச்சாரத்தின் மூலம் கேரளாவின் மையப்படுத்தப்பட்ட ஆளுகையின் அற்புதங்களை நான் பின்பற்ற விரும்புகிறேன்” என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.