சேலத்தில் அடுத்த அதிர்ச்சி : 4 ஆண்டுகளாக பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளி ஆசியர் உட்பட இரண்டு பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அடுத்தடுத்து மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் சம்பவங்கள் வெளிவருவதும், சில மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை, உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வகையில் சேலம் மாவட்டம் கருமந்துரை அடுத்த பகடுப்பட்டு மலை கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அவரது வீட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்றிய பெற்றோர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நினைவு திரும்பிய மாணவியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
தான் படித்து வந்த பள்ளியில் கராத்தே ஆசிரியராக பணியாற்றிவரும் ஆத்தூரை அடுத்த சீலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதுபற்றி பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவி கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கருமந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கராத்தே ஆசிரியர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து கருமந்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினர்கள் காவல் நிலைய நுழைவு வாயிலிலேயே இருவரையும் தாக்கினர். பள்ளிஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.