டாக்டர் படத்தில் நடித்த இந்த நடிகரின் பின்னணி தெரியுமா - போலீஸ் வேலையை ராஜினாமா செய்தவராம்...!
14 ஆண்டுகளுக்குப் பின் டாக்டர் படத்தின் மூலம் தனக்கு பாராட்டு கிடைத்திருப்பதாக நடிகர் கராத்தே கார்த்தி தெரிவித்துள்ளார்.
'சிங்கம் 3', 'தபாங் 3', 'என்னை அறிந்தால்', 'பிகில்', 'பேட்ட', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சங்கத்தலைவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த கராத்தே கார்த்தி, சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் நடந்த அகிலஇந்திய காவல்துறை பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமன்றி, கராத்தேவிலும் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியனாகத் தேர்வாகியுள்ளார். மேலும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட கலைகளையும் கற்று தேர்ந்துள்ளார்.
இதனிடையே சினிமா மீதான ஆர்வத்தால் காவல்துறை பணியைத் துறந்துவிட்டு நடிக்கத் தொடங்கினார். கமல் நடித்த தசாவதாரம் படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கிய கராத்தே கார்த்திக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் டாக்டர் படம் தான் அவருக்கான முகவரியாக அமைந்துள்ளது.
மேலும் 'கைதி' படத்தில் நடித்ததைப் பார்த்துதான் இயக்குநர் நெல்சன் டாக்டர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் என்றும், சிவகார்த்திகேயன், யோகி பாபு, வினய் போன்றோருடன் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்றும் கார்த்தி கூறியுள்ளார்.
என்னை நிறைய பேர் வட இந்தியர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் பச்சைத் தமிழன். எனது சொந்த ஊர் மதுரைதான். தொடர்ந்து நிறைய இயக்குநர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பும், பாராட்டும் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது என மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார் கராத்தே கார்த்தி.