இந்த காலத்துல இப்படி ஒரு அதிகாரியா? - லஞ்சமே வாங்குனதில்லையாம்! - யார் இவர்?
கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலர், மக்கள் லஞ்சம் தர வேண்டாமென அலுவலகத்தில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை கண்டு பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு அலுவலங்கள் என்றாலே லஞ்சம் என்பது மட்டுமே மக்களின் கவனத்துக்கு வருகிறது. கை மேல் காசு கொடுத்தால் எந்த காரியமாக இருந்தாலும் உடனே முடிந்து விடும் என்பதே தற்போதைய நிலைமை.
இந்த நிலையில், காரைக்குடி அருகே கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் தனது அலுவலகத்தில் தயவு செய்து லஞ்சம் கொடுக்காதீர்கள் என அறிவிப்பு பலகை வைத்திருப்பது மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” என்றும் அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் இதனை வெளியிட்ட நிலையில், இந்த காலத்தில் இப்படி ஒரு அதிகாரியா என வியந்து பார்க்கின்றனர் இணையதள வாசிகள்.
இது குறித்து பேசிய விஏஓ அருள்ராஜ், 2014ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். இதுவரை ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. என் பெயரை பயன்படுத்தி வேறு யாரும் மக்களிடம் லஞ்சம் வாங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
விஏஓ அருள்ராஜின் தனது பணியில் நேர்மையாக நடந்து கொள்வது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.