கேப்டனாக நீங்க இதெல்லாம் சொல்லலாமா? - விராட் கோலிக்கு கபில்தேவ் கடும் கண்டனம்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துடனான தோல்விக்கு காரணம் சொன்ன கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து கிட்டதட்ட தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நியூசிலாந்துடனான போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி, உண்மையை கூறவேண்டுமெனில் நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை. பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி. பந்து வீச்சைப் பொறுத்தவரை பந்து வீச போதுமான ரன் இலக்கு இல்லை. களத்தில் நுழைந்த போதிலிருந்தே எங்கள் உடல் மொழி சரியில்லை, தைரியமானதாக இல்லை.பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்று ஆடிய போதெல்லாம் விக்கெட்டை இழந்தோம்.
இந்திய அணிக்கு ஆடுவதென்றால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை திருப்தி செய்ய வேண்டும். இது அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து மட்டுமல்ல. வீரர்களிடமிருந்தே எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த அதிக எதிர்பார்ப்புகளே பதற்றத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல் பாசிட்டிவ் மனநிலையில் ஆடுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.விராட் கோலி போன்ற அந்தஸ்து கொண்ட ஒரு வீரரிடமிருந்து இது மிகவும் பலவீனமான கூற்று. அணிக்காக ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்ற பசியும் விருப்பமும் அவருக்கு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்திய அணியின் உடல் மொழியும், கேப்டனின் சிந்தனை செயல்முறையும் சரியாக இல்லாவிட்டால், டிரஸ்ஸிங் ரூமுக்குள் இருக்கும் வீரர்களின் மனநிலையை உயர்த்துவது மிகவும் கடினம். அணியின் மீதான விமர்சனம் நியாயமானதுதான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் அணியை ஊக்குவிக்க தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.