கேவலமாக நடத்தப்பட்ட குல்தீப் யாதவ் ... கொல்கத்தா அணி மீது புதிய சர்ச்சை
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தா அணி மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முதல் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்தது.
குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் கொடுத்து ரோகித் சர்மா, அன்மோல் ப்ரீத் சிங், பொல்லார்ட் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
ஆனால் கடந்த இரண்டு சீசன்களில் கொல்கத்தா அணிக்காக ஆடி வந்த குல்தீப் யாதவிற்கு மிக குறைவான போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறை டெல்லி அணிக்காக ரூ.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குல்தீப் தனது முதல் போட்டியிலேயே அசத்தினார்.
இந்நிலையில் குல்தீப் யாதவ் நன்றாக செயல்பட்டு வந்த நிலையில் கொல்கத்தா அணி அவரை விடுவித்ததும் குல்தீப் உட்பட நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். காரணம் அந்த அணியில் ஒரு வேலைக்காரன் போல தான் குல்தீப் யாதவ் நடத்தப்பட்டார் என நாங்கள் உணர்ந்தோம் என குல்தீப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா அணியின் காரணமாக பொருளாதார ரீதியாகவும் குல்தீப் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரூ.9 கோடி அல்லது ரூ.10 கோடிக்கு ஏலம் போக வேண்டிய அவர் ரூ.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். நான் அவரிடம் பணம் சம்பாதிப்பதை விட நாட்டுக்காக ஆடுவதே உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினேன் என கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.