கதறும் கன்னியாகுமரி: வெள்ளத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தைகள் - தவிக்கும் மக்கள்
கன்னியாகுமரியால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது, இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அங்கு மேலும் மழை கொட்டி தீர்த்ததால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு என அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த வெள்ளத்தால் சுமார் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சிக்கியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி விடிய விடிய நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குளச்சல் பகுதியில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வீட்டிற்குள் இடுப்பளவு வெள்ள நீர் புகுந்த நிலையில் அந்த குடும்பத்தினர் 3மாத இரட்டை கை குழந்தையுடன் வீட்டில் சிக்கி தவித்தனர்.
இவர்களை தீயணைப்பு துறையினர் அண்டாவில் வைத்து மீட்டனர். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வரும் நிலையில் உபரி நீர் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.