மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து - எம்.பி. - அமைச்சர் நேரில் ஆய்வு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து வணங்கி செல்வதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் காலை மதியம் மாலை வேளைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வழிபடுவது வழக்கம் ,மாசி கொடை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.இருந்தாலும் பக்தர்கள் வெளியிலும் சாலையிலும் நின்று வழிபட்டு செல்வர் .
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு பூசாரிகள் கருவறைக்கு வெளியே அமர்ந்திருந்தபோது, திடீரென கருவறையின் கூரையில் மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இதையடுத்து மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் ஆகியோரும் பார்வையிட்டனர் .
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கோவிலின் பழமை மாறாமல் புரனமைக்க அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.