“கன்னிப்பேச்சு” என்ற வார்த்தையை மாற்றக் கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர்கள்
“கன்னி” என்ற சொல் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொல்லா? தமிழ் இலக்கியங்களில் “கன்னி” என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரில், மக்களின் கவனத்தை பெற்று வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக உள்ளவர் சௌமியா அன்புமணி.
கடந்த வாரம் பேசிய அவர், “முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சட்டசபையில் நிகழ்த்தும் உரைக்கு ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தைக்கு பதில் அறிமுக உரை அல்லது முதல் உரை என்று மாற்றினால் நன்றாக இருக்கும்” என்ற கருத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் லதாவும் கன்னிப்பேச்சு என்ற சொல்லை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
““கன்னி” என்ற சொல் ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என அவர் கூறினார்.
இதன்பின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அதில், “இதற்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வானதி சீனிவாசனும் இதே கோரிக்கையை வைத்தார். அப்போதிருந்த பேரவை தலைவர் அதனை கருத்தில்கொள்வதாக கூறினார். இது நல்ல யோசனைதான்.
பெண்களுக்கு பல பருவங்கள் இருந்தது. இது ஒரு மரபாக இருந்தது. பெண்களின் சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் இதனை கருத்தில்கொண்டு அறிமுக உரை என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரும் கூறினார். சரி, இந்த “கன்னி” என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது?
அவை எவ்வகையான பொருளைக் கொடுக்கின்றன. சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ஓரம்போகியார் எழுதிய ஐங்குறுநூற்றின் 68-ம் பாடலில் “கன்னி விடியல்” என்ற வரி இடம்பெற்றுள்ளது.
முழு பாடல்,
“கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல்,
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே,
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே.”
இதில், ‘கன்னி விடியல்’ என்ற சொல் ‘இளமையான / புலர தொடங்கிய விடியல்’ என்ற பொருளைக் கொடுக்கிறது.
சங்க மருவிய கால இலக்கிய நூலான திணைமொழி ஐம்பதின் 49-வது பாடலிலும் கன்னி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இதனை கண்ணஞ்சேந்தனார் எழுதியுள்ளார்.
முழு பாடல்,
“மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு.”
இதில் ‘கன்னி இளஞாழல்’ என்ற சொல் ‘இளமையும் புதுமையும் பொருந்தி பூத்திருக்கும் ஞாழல் மரம்’ என்ற பொருளைக் கொடுக்கிறது.
திருத்தக்கதேவர் எழுதிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் 174-வது பாடலிலும் “கன்னி” என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
முழு பாடல்,
“வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து.”
இதிலுள்ள “இளங்கன்னி வாழைத் தண்டெனத் திரண்டு” என்ற வரி “இளமை பொருந்திய குலை தள்ளாத வாழையின் தண்டு போன்ற” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே நூலின் 900 வது பாடலில், “கன்னி” என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
“கன்னி மாநகர் கன்னியர் சூழ் தரக்
கன்னி மாடம் அடையக் கடி மலர்க்
கன்னி நீலக் கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்.”
கன்னி என்ற சொல் பல பொருள் கொடுக்கும் பாடலாக இதனை குறிப்பிடலாம். கன்னி மாநகர், கன்னியர், கன்னி மாடம், கன்னி நீலக் கண் போன்ற தொடர்களில் வெவ்வேறு சூழல்களில் வருகிறது.
அவற்றின் பொருள் கீழே வருமாறு:
கன்னி மாநகர் - அழிவற்ற / நிலையான நகரம்.
கன்னியர் - கன்னிப் பெண்கள் / திருமணம் ஆகாத பெண்கள்.
கன்னி மாடம் - கன்னிப் பெண்கள் தங்கும் மாடம் / பாதுகாப்பு நிறைந்த மாளிகை.
கன்னி நீலம் - புதிய நீலம் / புதிதாகத் தோன்றிய நீல நிறம்.
கண் கன்னி - அழகிய கண்களையுடைய பெண்.
கன்னி நற்றாய் - நற்றாயின் மகளான கன்னிப் பருவப் பெண்.
அவள் கன்னிக்கு - கன்னிப் பருவத்திலுள்ள அவளுக்கு
கன்னியர் கூறினார் - அவளுடைய தோழிப் பெண்கள் கூறினர்.
அதிலும் “கன்னி நீலக் கடிமலர்க் கண்கன்னி” என்ற முழுத் தொடர், “புதிய நீல நிறமும் மணமிக்க மலரும் போன்ற கண்களையுடைய கன்னிப் பெண்” என்ற பொருள்படும்படி உள்ளது.
இந்த பாடல் ஒன்றின் மூலம் கன்னி என்ற வார்த்தை பெண்ணை மட்டுமின்றி, புதுமை, அழிவற்ற, நற்குணங்களைக் கொண்டவை போன்ற பல பொருளில் தமிழில் பயன்பாட்டில் இருந்தது அறிய முடிகிறது.
இதேபோல், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்களிலும் “கன்னி” என்ற சொல், “இளமை, புதியது, புதுமை, மாறாத தன்மை, குமரி / மணமாகாத பெண், முதன்முதலான நிகழ்ச்சி, அழிவின்மை” போன்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
மன்னர்கள், படைத் தளபதிகளின் முதல் போரை குறிப்பிடும்போதும் கன்னிப்போர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னி என்ற வார்த்தை வீரத்தை குறிப்பிடும் போதும் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடிகிறது.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட “கன்னி” என்ற சொல் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொல்லா? என்பதற்கான பதில் “இல்லை” என்பதே.
எனவே, “கன்னி” என்ற சொல்லை “பெண்ணின் கன்னித்தன்மை” என்ற ஒரே பொருளுக்குள் சுருக்கிப் பார்ப்பது, தமிழில் அந்தச் சொல்லுக்குள்ள பொருள் செழுமையையும் அதன் நீண்டகால இலக்கியப் பயன்பாட்டையும் குறைத்து மதிப்பிடுவதாக அமையலாம்.
அதேநேரத்தில், இன்றைய சமூகச் சூழலில் “கன்னி” என்ற சொல்லுக்கு பெண்ணின் கன்னித்தன்மை என்ற பொருள் வலுவாகத் தொடர்புபடுத்தப்படுவதால், “கன்னிப்பேச்சு” என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை என்பது ஒரு சமகால மொழிப் பயன்பாடு குறித்த விவாதமாக இருக்கலாம்.
ஆனால் அந்த விவாதத்திலிருந்து “கன்னி” என்ற தமிழ்ச் சொல்லே ஆணாதிக்கச் சொல்லாகும் என்று பொதுவான முடிவுக்கு வருவது, அதன் இலக்கிய வரலாற்றையும் பல்வேறு பொருள் பயன்பாடுகளையும் கணக்கில் கொள்ளாததாகிவிடும்.
நன்றி
நிதிஷ் குமார்