புனீத் ராஜ்குமார் இழப்பு தனிப்பட்ட முறையிலும் எனக்கு பெரும் இழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

kannada mkstalin puneethrajkumar
By Irumporai Oct 29, 2021 11:01 AM GMT
Report

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவர் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றவர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர்.

 இந்நிலையில் இன்று காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன் அங்கு குவிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

புனித் ராஜ்குமார் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் , இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் :

புனித் ராஜ்குமாரின் இழப்பு கன்னட திரையுலகிற்கே பெரும் இழப்பு, எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனீத் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச்சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.