அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! போலீசை கண்டு திருடிய நகைகளை விட்டு சென்ற காமெடி திருடர்!
காஞ்சிபுரம் அருகே போலீசை கண்டு திருடிய நகைகளை சாலையிலேயே விட்டு சென்ற திருடனின் சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பெரியார் நகர் பாலாஜி தெருவை சேர்ந்த கங்காதரப்பா, தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று நள்ளிரவு பணிக்காக வீட்டை பூட்டி விட்டு நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வந்த கங்காதரப்பா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் திருட்டு கதையில் ஒரு திருப்பம்!
நேற்று நள்ளிரவு கங்காதரப்பா வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட திருடர் ஒருவர், கதவை பஞ்சர் பழுது பார்க்கும் கருவியை கொண்டு உடைத்து, வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து கொண்டு, ஜாலியாக வேறு தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரில் போலீஸ் வாகனம் வருவதை கண்டு, தம்மை தான் பிடிக்க வருகிறார்கள் என்று எண்ணி நகைகளையும், பைக்கையும் சாலையிலேயே விட்டு விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கீழே விழுந்திருந்த பைக்கை தூக்கி போலீசார், சோதனை செய்ததில், உள்ளே மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நகைகளையும், பைக்கையும் மீட்ட போலீசார், காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.