மீண்டும் அதிகரிக்கும் டெங்கு - 12 வயது சிறுமி உயிரிழப்பு
காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரின் மகள் சுருதி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு முன்பு சுருதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு நோய்ப் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி சுருதி உயிரிழந்தார். 12 வயது மகளை இழந்த சோகத்தில் அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.