தவெக குற்றவாளிகளின் கூடாரமா? கனிமொழி கடும் விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மீது தக்கலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தக்கலை, மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தவெக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனிமொழி எம்.பி பதிவு
தனது எக்ஸ் தளப் பதிவில், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கட்சி நிர்வாகி மீது விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நிறைந்த கூடாரமாகத் தவெக இருப்பதாக விமர்சித்த கனிமொழி, மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தனது கட்சியில் யாரைச் சேர்த்திருக்கிறார் என்பதை விஜய் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனது கட்சி நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதல்வர் விஜய்? சரித்திர பதிவேடு குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நிறைந்த கூடாரமாகத்தான் தவெக இருக்கிறது. முதலில் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், ஊருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தனது கட்சியில் யாரையெல்லாம் சேர்த்திருக்கிறார் என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பாதுகாப்பு வழங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், மக்களுடன் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் இந்த அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 23, 2026