தவெக அரசை யார் இயக்குகிறார்கள்? திமுக எம்.பி கனிமொழி கேள்வி

Vijay Smt M. K. Kanimozhi DMK
By Karthikraja Aug 08, 2026 02:55 PM GMT
Report

தவெக அரசை யார் இயக்குகிறார்கள் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம்

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. 

தவெக அரசை யார் இயக்குகிறார்கள்? திமுக எம்.பி கனிமொழி கேள்வி | Kanimozhi Questions Who Control Tvk Govt

இதில், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்த 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 19 எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

கனிமொழி கேள்வி

இந்நிலையில் செய்தியாளர்களை பேசிய திமுக எம்பி கனிமொழி, "39 எம்பிக்கள் புறக்கணித்துள்ள சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது தொகுதி மறுவரையறைக்கு எதிராக மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய அடிப்படைத் தேவை என்ன இருக்கிறது? 

தவெக அரசை யார் இயக்குகிறார்கள்? திமுக எம்.பி கனிமொழி கேள்வி | Kanimozhi Questions Who Control Tvk Govt

கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், த.வெ.க சார்பில் அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டு, தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். அந்த தீர்மானம் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது, பெரும்பான்மை எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இந்தக் கூட்டத்தை தவெக அரசு ஏன் கூட்டுகிறது என்பதை விளக்க வேண்டும்.

இதற்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டபோது 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம்

. தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தோம். இதன் மூலம், பாஜக ஆட்சியில் முதன்முறையாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு திமுகவினரின் தொடர் முன்னெடுப்புகளே காரணமாக அமைந்தன.

ஒன்றிய அரசு இதுவரை தொகுதி மறுவரையறையை இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப் போவதாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் இடம்பெறும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படையில் இந்த மசோதா குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது?

இந்தக் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க கட்சியின் தலைமைக்கு தான் கடிதம் எழுதுவார்கள். ஆனால், தலைமை செயலாளர் எம்பிக்களுக்கு தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை செயலாளர் யாருக்கு பணியாற்றுகிறார்? அரசாங்கத்திற்காக இல்லை கழகத்திற்காக? மேகதாது, விவசாயி பிரச்சினைகள் உச்சத்தில் உள்ளபோது அதனை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எங்களின் நோக்கம் தொகுதி மறுவரையறையை முற்றிலும் எதிர்ப்பது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கீடு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். அப்படி செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையும். தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறைக்கப்படாமல் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.