மேகதாது போன்று நியாயமான விஷயங்களுக்கு பாஜக துணை நின்றால் பாஜகவிற்கு நன்றி - விருதுநகரில் கனிமொழி எம்.பி பேட்டி!

DMK BJP Kanimozhi Karunanidhi
By Thahir Jul 15, 2021 07:36 AM GMT
Report

பெருந்தலைவர் காமராசரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராசர் மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராசரின் திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி மற்றும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். இராமச்சந்திரன், மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவியும், அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழாவில் விருது நகரில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

மேகதாது போன்று நியாயமான விஷயங்களுக்கு பாஜக துணை நின்றால் பாஜகவிற்கு நன்றி - விருதுநகரில் கனிமொழி எம்.பி பேட்டி! | Kanimozhi Karunanidhi

தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அதை சட்டம் ஆக்கினார். தமிழகம் இன்று கல்வியில் முன்னிலையில் இருப்பதற்கு அடித்தளம் இட்டவர் பெருந்தலைவர் தான். அதை நாம் நன்றியோடு நினைவு கொள்வோம். தலைவர் வழியில் தமிழக முதல்வரும் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்னெடுத்து இருக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்டபோது நியாயமான விஷயங்களுக்கு துணை நின்றால் நன்று என தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆட்சியில் சட்ட போராட்டத்தை சரியாக கையில் எடுக்காததால் தான் தமிழக மாணவர்களை இந்த நிலைக்கு நிறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு தொலைநோக்கு பார்வையோடு தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் என்றார்.