டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்திய போலீஸ்!

government tractor rally
By Jon Feb 05, 2021 03:16 AM GMT
Report

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71 நாட்கள் ஆகியும் தொடர்ந்து வருருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 12 கட்டங்கள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து, கடந்த ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறையாக மாறியது.

இதில் விவசாயி ஒருவர் உயிரிந்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு டெல்லி போலீஸ் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளது. இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி - உ.பி. எல்லையான காஜிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திக்க தமிழக எம்பிக்கள் பேருந்தில் சென்றார்கள்.

திமுக எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் பேருந்தில் சென்றனர். மல்லிகார்ஜுனா கார்கே, அர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் பேருந்தில் உடன் சென்றனர்.

ஆனால் விவசாயிகளை சந்திக்க விடாமல் தமிழக எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்பகுதியில் 144 தடை உள்ளதாலும் எம்பிக்களை விவசாயிகளை சந்திக்க டெல்லி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.