முதல்வர் பழனிசாமிக்கு அடிக்கல் நாட்ட மட்டுமே தெரியும்: கனிமொழி

dmk edappadi kanimozhi aiadmk
By Jon Mar 30, 2021 01:34 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திட்டங்களை அடிக்கல் நாட்ட மட்டுமே நேரம் உள்ளது, அடுத்த செங்கல்லைக் கூட அவர் எடுத்து வைக்க மாட்டார் என்றும் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மயிலை த.வேலு போட்டியிடுகிறார். வேலுவை ஆதரித்து திமுகவின் மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான கனிமொழி இன்று மயிலாப்பூர் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய கனிமொழி, ''திமுக ஆட்சி அமைய உள்ள நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் வேலுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றப்படும்.

இங்குள்ள வீடுகள் சரி செய்து தரப்படும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்து விட்டேன். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தப் பகுதியிலும் சாலை வசதிகள் முறையாக இல்லை. எங்கே சென்றாலும் அங்குள்ள சாலைகள் சரியாக இருப்பதில்லை. எட்டு வழிச் சாலையைத் தவிர எடப்பாடி பழனிசாமி வேறு எதுவும் போடமாட்டார்.

ஏனெனில் அதில்தான் டெண்டர் விட்டால் அவருக்கு லாபம். அவர் டெண்டர் பழனிசாமி இல்லை அடிக்கல் நாயகன் பழனிசாமி. திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டுவார். அதற்குப் பிறகு அவர் எதுவும் செய்யமாட்டார். ஏன் அடுத்து செங்கல்லைக் கூட எடுத்து வைக்க மாட்டார். அவருக்கு அதற்கு நேரம் இல்லை'' என்று கனிமொழி பேசினார்.