கோவில்பட்டி தொகுதியில் மார்ச் 28-ல் கனிமொழி எம்பி பிரச்சாரம்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 28-ல் தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்பி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளா் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து வருகிற 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன்படி அன்றைய தினம் (28.03.2021) காலை 9.00 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார். அதேபோல கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சீனிவாசனை ஆதரித்து மாலை 3.30 மணிக்கு கோவில்பட்டி நகரத்திலும், 4.30 மணிக்கு கழுகுமலை பேரூராட்சியிலும் 5.30 மணிக்கு கயத்தாறு பேரூராட்சியிலும் தோ்தல் பிரசாரம் செய்கிறார்.
எனவே, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.