ஏற்கனவே நிலைப்பாடு தெளிவாகிவிட்டது... கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி விமர்சனம்

Tamil nadu DMK TVK
By Vinoja Aug 08, 2026 11:00 AM GMT
Report

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே நிலைப்பாடு தெளிவாகிவிட்டது... கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி விமர்சனம் | Kanimozhi Asks What Is The Need For Meeting By Cm

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக நிபந்தனை விதித்தது.

மேகதாது விவகாரத்தில் மவுனம் காத்துவிட்டு தொகுதி மறுவரையறை குறித்து மட்டும் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்திருந்தார். இதனிடையே, திமுகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.தவெக நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி எம்.பி பதிவு 

கனிமொழி தனது எக்ஸ் பதிவில்,

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக ஏற்கெனவே எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும், திருத்தப்பட்ட சட்டமுன்வடிவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒரு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், காவிரி பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் இன்றைய கூட்டம் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வழங்குவதற்கு மாநில அரசு தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அக்கட்சியின் எம்.பி.க்கள் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தை புறக்கணிப்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, திமுக மற்றும் அதிமுக கூட்டத்தை புறக்கணித்திருப்பது புதிய அரசியல் கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.

மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் தற்போது தேவையில்லை என்றால், கடந்த ஆண்டு இதே விவகாரத்தில் கூட்டம் நடத்தியது ஏன் என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியதுடன், திமுக பாஜக பக்கம் செல்லக் காத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.