ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ரஷ்யா செல்லும் கனிமொழி - காரணம் என்ன?
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலக அரங்கில் அம்பலப்படுத்த மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதனையடுத்து, ட்ரோன்கள் மூலம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இதனை முறியடித்து, பதிலடி கொடுத்தது.
இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் கடந்த 10 ஆம் தேதி ஏற்பட்ட போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக 7 குழு
இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, சர்வதேச அமைப்புகளின் நிதியை எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவது போன்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை உலக அரங்கில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ க்கு உள்ள தொடர்பு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பொய் பிரச்சாரங்கள் ஆகியவை குறித்த ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 8 எம்பிக்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் இடம்பெறுவார்கள்.
One mission. One message. One Bharat 🇮🇳
— Kiren Rijiju (@KirenRijiju) May 17, 2025
Seven All-Party Delegations will soon engage key nations under #OperationSindoor, reflecting our collective resolve against terrorism.
Here’s the list of MPs & delegations representing this united front. https://t.co/1igT7D21mZ pic.twitter.com/3eaZS21PbC
நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இந்த குழுவினர் வரும் 23 ஆம் தேதி முதல், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், உட்பட 32 நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ரஷ்யா செல்லும் கனிமொழி
காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்கிறது.
பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும், ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது.
சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது.
சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கும், சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த குழுக்கள், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த ஆதாரங்களை வழங்கி, பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கு போட்டியாக, பாகிஸ்தானும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு அமைத்து உள்ளது. சமீபத்தில் சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால், இந்தியர்களின் ரத்தம் ஒடும் என்று பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.