20 டிக்கெட்டுகளே விற்பனையாகி படுதோல்வி அடைந்த படம்: அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகை!
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர், நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தலைவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக கங்கனா நடித்துள்ள ‘தாகத்’ படம் கடந்த 20-ம் தேதி வெளியானது. இப்படம் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது.
ஆனால், வெளியான 8-வது நாளில் 20 டிக்கெட் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 20-ம் தேதி வெளியன இந்த திரைப்படம் மொத்தமே ரூ.3 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், 'தாகத்' திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வியை தொடர்ந்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தி ஆட்சியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் தொகுத்து திரைப்படமாக உருவாகவுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு “எமர்ஜென்சி” என்று பெயரிடப்பட்டு, இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன் கங்கனா ரனாவத் இயக்கி நடித்த படம் “மணிகர்னிகா” மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.