1947 ஆம் ஆண்டு போர் நடந்து சுதந்திரம் கிடைத்ததா? - நடிகை கங்கனா மீண்டும் சர்ச்சை கேள்வி
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மீண்டும் சர்ச்சைக்குள்ளான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் டிவி சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது "உண்மையிலேயே 2014-ம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1947-ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்று பேசினார்.
இந்தப் பேச்சை கண்டித்து கங்கானவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அவர் மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாகவும், ஆனால் அதற்கு யாரேனும் தனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், பதிலளித்தால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் கங்கனா கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ``நான் அன்று பேசிய நிகழ்விலேயே அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் ஜி போன்ற தலைவர்களின் தியாகத்துடன், 1857-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் பற்றியும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
1857 போராட்டம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்தப் போர் நடைபெற்றது. 1947-ல் யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாக தெரியப்படுத்தினால், விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறேன்” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மற்றொரு பதிவில், காங்கிரஸை "பிச்சைக்காரன்" என்று அழைத்தது தொடர்பாக ஒரு வரலாற்று புத்தகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டி ``நான் மட்டும் காங்கிரஸை பிச்சைக்காரன் என்று சொல்லவில்லை" என்றும் கூறியிருந்தார்.
மேலும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கைப் படமான மணிகர்னிகாவில் நடிக்கும்போது 1857-ஆம் ஆண்டு போராட்டத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தேன். இந்தியாவில் வலதுசாரிகளால் தேசியவாதம் வளர்ந்தது என்பதை மறுத்தால் காந்தி ஏன் பகத்சிங்கை இறக்க அனுமதித்தார், ஏன் நேதாஜி கொல்லப்பட்டார், ஏன் வெள்ளைக்காரர்களால் இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு பிரிவினைக் கோடு வரையப்பட்டது, சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியர்கள் ஒருவரையொருவர் ஏன் கொன்றார்கள் என்பதை எனக்கு புரிய வையுங்கள்.
என்னைப் பொறுத்தவரை நேதாஜி தலைமையிலான ஐஎன்ஏ-வின் சிறு கலகத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அதன்பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமராக இருந்திருக்கலாம் என்று பேசியுள்ளார்.