ஏ.எல் விஜய் போல் எந்த இயக்குநரும் என்னை மரியாதையாக நடத்தியதில்லை - கண்கலங்கிய கங்கனா ரணாவத்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தற்போது ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்.
மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதனையடுத்து, ‘தலைவி’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டிரைலர் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியது கிடையாது என்று தழுதழுத்த குரலில் கண் கலங்கினார்.

‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா ரணாவத்திற்கு 'மணிகர்னிகா: ஜான்சி ராணி' மற்றும் 'பங்கா' படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.