வேளாண் சட்டம் ரத்து வெட்கக்கேடானது: நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை இன்று ரத்து செய்த நிலையில் அதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை.
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதுடன், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிரடியாக அறிவித்தார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மோடி தெரிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் மத்திய அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதனிடையே பா.ஜ.க ஆதரவாளரும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவருமான நடிகை கங்கனா ரணாவத் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது 'துக்ககரமான, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என கூறியுள்ளார். பாஜக ஆதரவாளரான கங்கனா இப்படி தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.