மீண்டும் கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு புகார் - கைது செய்ய வேண்டும் என கோரிக்கை
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும், தேசத்துரோக வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கவனம் பெற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சர்ச்சைக்கருத்துகளை தெரிவித்து வருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அந்த வகையில் நாட்டின் சுதந்திரம் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அதற்கு கண்டனமும் வலுத்து வருகிறது.
டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு உண்மையிலேயே 2014-ம் ஆண்டுதான் சுதந்திரம் அடைந்தது. 1947-ம் ஆண்டு கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா? என்று பேசியிருந்தார்.
அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று கங்கனாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவமதிக்காத வகையில் மன உளவியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கங்கனா மீது வழக்கு பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.