ராஜா நான் ராஜா...கேன் வில்லியம்சனை பாராட்டும் கிரிக்கெட் உலகம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சனிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் மிக முக்கிய வீரரான மிட்செல் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
மற்றொரு துவக்க வீரரான கப்தில் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த கிளன் பிலிப்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபுறம் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
கேன் வில்லியம்சன் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த நீஷம் (13) மற்றும் செய்ஃபர்ட் (8) கடைசி ஓவர்களில் பெரிதாக ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தால் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்தநிலையில், இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
உலகின் தலைசிறந்த வீரர் என்பதை கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.