காஞ்சிபுரத்தில் பாமக-வை வீழ்த்த காடுவெட்டி குருவின் மகளை களத்தில் இறக்கிய திமுக
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சிவிஎம்பி எழிலரசனுக்கு ஆதரவாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது. காஞ்சிபுரம் தொகுதியில் பாமக- திமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது, பாமக சார்பில் மகேஷ்குமாரும், திமுக சார்பில் தற்போதை சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசனும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் பாமக-வுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்நிலையில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி, திருப்பருத்திக்குன்றம், கோவிந்தவாடி அகரம், காரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
குறிப்பாக வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவரை திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர். இவருடன், இவரது கணவர் மனோஜும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.