ஆயிரம் கோவில்களின் நகரம்...பட்டு துணியின் தலைநகரம்...காஞ்சிபுரம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

Tamil nadu Kanchipuram
By Karthick Aug 23, 2023 06:54 AM GMT
Report

சென்னையில் பாதியை தனக்குள் அடக்கி, கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் வரலாறு குறித்தும், அங்கு தவற விடக்கூடாது முக்கிய இடங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

காஞ்சிபுரம்   

முன்பு ஆங்கிலேயர்களால் காஞ்சீவரம் என அழைக்கப்பட்ட இந்நகரம், எல்லா புனித நகரங்களை போன்றே காஞ்சிபுரமூம் வேகவதி ஆற்றின் கரையில் அமையப்பட்டது. கிமு. 2-ம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரமாகவும், பின்பு 6 முதல 8-ஆம் நூற்றாண்டு வரை “பல்லவ” மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்த காஞ்சிபுரம், பல்லவர்கள் கட்டட கலையின் எடுத்துக்காட்டான மகாபலிபுர சிற்பக்கலைகள் உலகளவில் பெரும் சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.

kanchipuram-history-in-tamil

காஞ்சிபுரம் கோவில்களுக்காகவே மிகவும் ப்ரசித்திபெற்றதாகும். முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான இந்நகரில் பல கோயில்கள் உள்ளன. இது கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று பல புனைபெயர்களும் உள்ளது.கர்நாடக இசையின் மும்மூர்த்திகளானத் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

வரதராஜ பெருமாள் கோவில்:  

23 ஏக்கர் நிலப்பரப்பில் 19 கோபுரங்களும் 400 தூண் மண்டபங்களையும் கொண்டு திகழும் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 12 ஆழ்வார்களும் இந்த கோயிலில் விஜயம் செய்து திருமாலை பாடியதாக கூறப்படுகிறது.

kanchipuram-history-in-tamil

கலைநயமிக்க சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் நிறைந்த இக்கோயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர். இந்த கோவிலில் உள்ள தங்க பல்லி மிகவும் பிரபலம். இந்த கோவிலில் இருக்கும் குளத்தில்தான் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்திவரதர் நீருக்குள் இருக்கிறார்.

மகாபலிபுரம்

முக்கியமான நினைவுச் சின்னங்கள் மற்றும் குகைக் கோயில்கள் அமைந்துள்ள நகரமான இங்கு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கோவாவைப் போன்று வெளிநாட்டவர்களின் வருகையை நம்பி தங்கும் விடுதிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர். மேலும், சின்னச் சின்னக் கடைகளை நடத்துபவர்களும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பி உள்ளனர்.

kanchipuram-history-in-tamil

சிற்ப நகரமான மாமல்லபுரத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் கடைகளை அதிக எண்ணிக்கையில் காணலாம். இங்கிருந்து, உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கற்சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் பல்லவர்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்த மாமல்லபுரத்தில் துறைமுகமும் இருந்தது. கடல் வழியாக வாணிபமும் சிறப்பாக நடைபெற்று வந்தது. 

கைலாசநாதர் கோயில்

தென்திசை கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை பெற்ற அரசன் ராஜசிம்மன். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, கோயில் முழுவதையுமே சிங்கங்களே தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது.

kanchipuram-history-in-tamil

பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி தேவர் அனுமதி பெற்றே நாம் கோவிலுக்குள் செல்ல முடியும்.இந்தக் கோயிலில் நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் வெளிப்படுத்தும் படி அமைந்துள்ளது.வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்றை காணும் போதே வியப்பில் ஆழ்த்துகிறது. சிவபெருமானின் தோற்றங்களையும் சிவபெருமானின் பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

தமிழகத்தின் மிக முக்கிய பறவைகளின் சரணாலயங்களுள் ஒன்று வேடந்தாங்கல். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் 1858-இல் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம் சுமார் 160 ஆண்டுகாலமாக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

சிறப்பம்சங்கள்

இங்குள்ள ஏரியின் பரப்பளவு 75 ஏக்கர். உள்பகுதியில் கடம்ப மற்றும் வேல மரங்கள் நிறைந்து உள்ளது. இம்மரங்களின் மேற்கிளைகளில் கூடு கட்டி முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யவும் தங்கி செல்லவும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன.

kanchipuram-history-in-tamil

வேடந்தாங்கலுக்கு அழையா வெளிநாட்டு விருந்தாளிகளாக, பாம்புதாரா, கரண்டிவாயன், கூழைக்கடா, அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.பறவைகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இங்கு நிலவும் பருவநிலையும், இனவிருத்தி செய்து தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சீசன் காலமாக உள்ளது.

ஏகாம்பரநாதர் திருக்கோயில்

ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

kanchipuram-history-in-tamil

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 

மசூதிகள்

காஞ்சிபுர மாநகரில் இரண்டு முக்கிய மசூதிகள் அமைந்துள்ளன. இம்மசூதிகள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நவாப்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதிகள் ஜமா மஸ்ஜித் என அழைக்கப்படுகிறது. மசூதியின் உள்ளே 108 சிவலிங்கம் அமைக்கப்பட்டு மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது.

kanchipuram-history-in-tamil

புகழ் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு மசூதி அமைந்துள்ளது. வைகுண்ட பெருமாள் கோயிலுக்கும் மசூதிக்கும் ஒரே குளம் பொதுவாக அமையப்பெற்று மத நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மேலும் வரதராஜ பெருமான் திருக்கோயில் பிரம்மோற்வத் திருவிழாவில் இஸ்லாமியர்களும் இடம் பெறுவது தனிச் சிறப்பாகும்.  

காஞ்சிபுர பட்டு

காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டு என்பதால் காஞ்சிப்பட்டு என்பது மிகவும் பிரபலமான பட்டு வகைகளில் ஒன்றாகும். இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06ல் அறிவிக்கபட்டது. காஞ்சிபுரம் புடவையின் தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த புடவைகள் கோவில்களில் நெய்யப்பட்டது. தூய மல்பெரி பட்டில் இருந்து நெய்யப்பட்ட காஞ்சிபுரம் சேலைகள் எண்ணற்ற வண்ணங்களில் காணப்படுகின்றன.

kanchipuram-history-in-tamil

இந்தப் புடவைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பெண்களால் திருமண மற்றும் விசேஷ புடவைகளாக அணியப்படுகின்றன. இந்த புடவைகளில் பார்டர்கள் மற்றும் பல மாறுபட்ட நிறத்தில் கனமான தங்க நெசவு உள்ளது. காஞ்சிபுரம் புடவைகள் பாரம்பரியமாக எளிய தங்கக் கோடுகள் அல்லது தங்கப் புள்ளிகளைக் குறிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டிருந்தன. ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன.