15 பேரில் 14 நோயாளிகள் மாயம் ? - விளாசிய மாவட்ட ஆட்சியர்
ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் உள்நோயாளியாக பதிவு செய்யப்பட்ட 14 நோயாளிகள் இல்லாததால் அங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை ஊழியர்களை கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று திடீரென நேரில் ஆய்வு செய்தார். உள்நோயாளிகள் பிரிவுகளுக்குச் சென்று பார்வையிட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்து அறிக்கையை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது இன்று ஒரு நாளில் மட்டும் மருத்துவமனைக்கு புறநோயாளிகள் வருகை பதிவேட்டில் 15 நோயாளிகள் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவமனையில் ஒரே ஒரு நோயாளி மட்டுமே தான் தங்கியிருந்தார்.
இதனால் கடுப்பான மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்ற நோயாளிகள் எங்கே சென்றனர் என மருத்துவர்களை விளாச, அவர்களோ பதில் கூற முடியாமல் திணறினர். மேலும் மருத்துவர்கள் மருத்துவருக்கு உண்டான உடையில் இல்லாமல் இருந்ததால் எப்போதும் மருத்துவ உடையில் தான் மருத்துவர்கள் மருத்துவமனைகள் பணி புரிய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்த மாவட்ட ஆட்சியர் மருந்து அறை, பரிசோதனை அறை, காத்திருப்போர் அறை, கழிவறையை பார்வையிட்டார். சுகாதார பணியாளர்கள் மூலம் செடிகள் மற்றும் புதர்களை அகற்றி காலை மற்றும் மாலை வேளைகளில் கொசு மருந்து புகை அடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.