காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டிட வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்றைய தேதியில் மாவட்டத்தில் மொத்தம் 2805 நபர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருவதால் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் முந்தைய நாட்களில் 1 சதவீதமாக இருந்து தற்போது 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 5000 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் தொற்று அறியும்பட்சத்தில் அவர்களை அரசு மருத்துவமனை அல்லது கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி அவர்களின் தொற்றின் நிலைகளை வகைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் இறப்பு விகிதம் பெருமளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது அரசு மருத்துவமனையில் 6 மட அளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உபயோகத்தில் உள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இன்றைய தேதியில் 317 படுக்கை வசதி கொண்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இன்று 40 படுக்கை வசதிகள் கொண்ட 2 புதிய மையங்கள் விரிவுபடுத்த உள்ளது.
தற்போது 163 பேர் ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட படுக்கையினை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும் 77 ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட படுக்கைகள் காலியாக உள்ளது. புதியதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டிடம் கட்டி முடியும் பட்சத்தில் கூடுதலாக 250 படுக்கைகள் அமைக்கப்படும். அதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பராமரிப்பு மையங்களை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் பல ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இவ்வாய்வின் போது இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.ஜீவா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.