இந்திய சினிமாவின் முதல் கோடீஸ்வர நடிகை யார் தெரியுமா?
நடிகை கனன் தேவி 30 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு படத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளமாக பெற்றார்.
கனன் தேவி
தற்போதைய காலகட்டத்தில், ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டில் பெரும் தொகை, அந்த படத்தின் கதாநாயகனுக்கே சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.15,000 முதல் 20,000 வரை இருந்த காலக்கட்டத்திலே நடிகை ஒருவர் ஒரு படத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். மேலும் பாடகியான இவர், ஒரு பாடலுக்கே ரூ.1 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்த பணத்தின் இன்றைய மதிப்பை கணக்கிட்டால், கனன் தேவி இந்தியாவின் முதல் 'கோடீஸ்வர' நடிகையாகக் கருதப்படலாம்.
அவர்தான் இந்திய சினிமாவின் பிரபல நடிகையும், பாடகியுமான கனன் தேவி.
இளமைக்காலம்
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுராவில் பிறந்த கனன் தேவியை ரத்தன் சந்திர தாஸ் மற்றும் ராஜோபாலா தம்பதியினர் வளர்த்து வந்தனர்.
ரத்தன் சந்திர தாஸ் அவரை தனது சொந்த மகள் போல் வளர்த்து இசை பயிற்சி அளித்து வந்தார். சில வருடங்களில் அவர் மரணமடைந்தையடுத்து அவரது குடும்பம் வறுமையில் வாடியது.
இதனால் தனது 7 வயதிலே கனன் தேவி தனது தாயுடன் வீட்டு வேலைகளுக்கு சென்றார். அங்கு உறவினர் ஒருவர் வீட்டில் அதிக நேரம் வேலை வாங்கி கொடுமை செய்ததால் அங்கிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர், கொல்கத்தாவில் உள்ள மதன் தியேட்டர் மற்றும் ஜோதி தியேட்டரில் வாய்ப்பு கிடைத்தது.
கனனின் திறமையை கண்ட மதன் மூவி ஸ்டுடியோ, 'ஜெய்தேவ்' படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்து, மாதத்திற்கு 5 ரூபாய் சம்பளம் வழங்கியது.
இரண்டு திருமணம்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹிரென் போஸ், பாடலாசிரியர் தீரென் தாஸ் மற்றும் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோருடன் சில பாடல்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், சங்கராச்சாரியார், ரிஷிர் பிரேம், ஜோர்பரத், விஷ்ணு மாயா, பிரஹ்லாத் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், விஷ்ணு மாயா மற்றும் பிரஹ்லாத் ஆகிய படங்களில் ஆண் வேடங்களிலும் நடித்துள்ளார்.
50 படங்களில் நடித்துள்ள இவர், 40 பாடல்களைப் பாடியுள்ளார். ஆண் ஆதிக்கம் நிறைந்த சினிமா துறையில், 'மேடம்' என்று அழைக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான்.
ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. 1940 ஆம் ஆண்டு அசோக் மைத்ரா என்பவரை திருமணம் செய்த கனன் தேவி, 1945 ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
1949 ஆம் ஆண்டு, ஹரிதாஸ் பட்டாச்சார்ஜி என்பவரை திருமணம் செய்தவர், 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவரையும் பிரிந்து வாழ்ந்தார். கனன் தேவி ஜூலை 17, 1992 அன்று தனது 76 வயதில் காலமானார்.