தலைமறைவாக இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அதிரடி கைது
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சர்ச்சை பேச்சு
இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது.
இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடருக்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
புதுச்சேரியில் அதிரடி கைது
மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் தலைமறைவான கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரியில் மறைந்திருந்த போது கைது செய்துள்ளனர்.