தேவையற்ற கருத்துக்களை பேசுவது பேஷன் ஆகிவிட்டது...கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் - நீதிபதி
நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சு
அண்மையில் மேடை ஒன்றில் சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
புதுச்சேரியில் அதிரடி கைது
மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் தலைமறைவான கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்ட் 15-ம் தேதி புதுச்சேரியில் மறைந்திருந்த போது கைது செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இந்த நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்போது தேவையற்ற கருத்துகளை பேசி யூடியூப்பில் பதிவிடுவது பேஷன் ஆகிவிட்டது. ஒரு கட்சியில் உள்ள நீங்கள் மாற்று கொள்கை உடையவர்களை ஏன் விமர்சித்து பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் இது போன்று பேச மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
எழுப்பூர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் தரப்பில் இந்த உத்தரவாதத்தை தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும்.
அதே சமயம் 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.